Friday 31 October 2014

ஏற்காடு - Yerkadu

ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை ஊராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. 

19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காபி செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. 

இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு அருவியில் குளித்து மகிழ கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எனும் அருவி ஒன்றும் உள்ளது. ஏற்காடு ஏரியில் நிரம்பினால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இங்குள்ள பக்கோடா முனை எனுமிடத்திலிருந்து பார்த்தால் கீழுள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் இங்கு மலர்க்கண்காட்சி நடைபெறும். ஏற்காடு அடிவாரத்தில் குருவம்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. ஏற்காடு செல்வோர் இங்கும் சென்று வரலாம். ஏற்காடு செல்வோர் பஸ் அல்லது ரயில் மூலம் சேலம் வந்து அங்கிருந்து மலைக்குச் செல்லும் விசேஷப் பேருந்தில் பயணம் செய்யலாம். ஊட்டி, கொடைக்கானல் சென்று கோடைக் காலத்தை கழிக்க வசதியில்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் ஏற்காட்டில் மிகக் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம்.

No comments:

Post a Comment