Tuesday 4 November 2014

இந்தியாவில் எப்படி கருப்பு பணம் வெள்ளையாக மாறுகிறது தெரியுமா



கருப்பு பணம் இந்தியாவில் இருந்து எப்படி வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு மீண்டும் தாயகத்துக்கே திரும்பி வருகிறது என்பதை தெரிந்து கொண்டால்தான் கருப்பு பண முதலைகளின் நெட்வொர்க் எவ்வளவு வலிமையானது என்பதை புரிந்து கொள்ள முடியும். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பதற்கு இந்த கருப்பு பண முதலைகளின் செல்வாக்கு கடல் கடந்தும் இருப்பது ஒரு உதாரணம்.

இந்தியாவில், வரி செலுத்தாமல் சேர்க்கும் பணத்தை சுவிட்சர்லாந்து, மொரீசியஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணமாக சேமித்து வைக்கும் பண முதலைகளுக்கு, அந்த பணத்தால் என்ன லாபம் கிடைக்கும்.

பணம் வெள்ளையாக அதாவது சட்டப்பூர்வமாக திரும்பி அவர்கள் கைகளுக்கு வந்தால்தானே அதை செலவிட முடியும். இதை யோசித்துதான் கருப்பு பண முதலைகள் வழி கண்டுபிடித்து வைத்துள்ளன. அது 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம். மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் (CBDT) தலைவராக அப்போது இருந்தவர் ஆர்.பிரசாத்.

மொரீசியஸ் தீவின் தலைநகர் போர்ட் லூயிசுக்கு திடீரென பிரசாத் விஜயம் செய்தது அப்போதுதான். அவர் சென்றது, தீவின் அழகை சுற்றிப்பார்க்க கிடையாது. இரு நாடுகளுக்கு நடுவே இருக்கும் இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தத்தை மாற்றியமைக்கும் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவே பிரசாத் அப்போது அங்கு சென்றிருந்தார். ஆனால் மொரீசியஸ் இந்த கோரிக்கைக்கு ஒத்துழைக்காததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. ஆனால் கருப்பு பணத்தின் ஆணி வேர் குறித்த ஒரு பார்வையை அந்த பயணம் பெற்றுத் தந்தது. மொரீசியஸ் என்ற குட்டித் தீவில் சுமார் 30 ஆயிரம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், அந்த நிறுவனங்கள் நிலத்தில் அல்ல, வெறும் காகிதத்தில் மட்டுமே கம்பெனிகளாக நீடிக்கின்றனவாம். நிறுவனம் ஒன்று செயல்படுவதை போல காண்பித்துவிட்டு அதில் முதலீடு செய்யப்படுவதாகவும் கணக்கு காட்டப்படுகிறதே ஒழிய, உண்மையில் அந்த தீவில் அப்படி எதுவும் நிறுவனங்கள் கிடையாது. பிரசாந்த் அறிந்து கொண்ட இந்த உண்மை, கருப்பு பண தேடலுக்கான வழிகாட்டியாக மாற உதவியது. உதாரணத்துக்கு, மொரீசியசிலுள்ள போலி நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட பண மதிப்புக்கு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதாக பில் போட்டுவிடும். ஆனால் உண்மையில் அவ்வளவு மதிப்புக்கு பொருட்கள் ஏற்றுமதியாகியிருக்காது.

கருப்பு பண முதலாளிகள் அந்த பணத்தை மொரீசியசிலுள்ள நிறுவனத்திற்கு அளித்துவிடுவார்கள். அந்த பணம் மொரீசியஸ் வங்கியில் சேமிக்கப்படும். இது ஏதோ பொருளை ஏற்றுமதி செய்ததற்கு கிடைத்த பணம் என்றுதான் மொரீசியஸ் அரசு நினைத்துக்கொள்ளும். ஆனால் கூடுதலாக கணக்கு காட்டி கருப்பு பணத்தை வாங்கி வைத்துள்ளது அவர்களுக்கு தெரியாது. இதேபோல ஹவாலா முறையிலும் பண பரிவர்த்தனை வங்கிகளுக்கு செல்கிறது.

ஆனால் அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்துக்கு பிறகு சர்வதேச விமான நிலையங்கள், வங்கிகளின் பண பரிவர்த்தனைகள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுவதால் ஹவாலா முறையில் பணம் கொண்டு செல்வது மிகவும் குறைந்துவிட்டது.

வெளிநாடுகளிலுள்ள அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளித்தும் கருப்பு பணம் நாடு கடத்தப்படுகிறது. உதாரணத்திற்கு சுவிஸ் நாட்டிலுள்ள ஒரு அறக்கட்டளைக்கு இந்திய பண முதலாளி பணத்தை நன்கொடை என்ற வடிவத்தில் அளிப்பார். அந்த பணத்தை சுவிஸ்சிலுள்ள பண முதலாளியின் உறவினர் அறக்கட்டளையிடமிருந்து பெற்றுக்கொள்வார்.

இதுபோன்ற வழிகளில்தான் கருப்பு பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது. சென்ற பணம் திரும்பி வெள்ளையாக வருவதற்கும் பல வழிகளை கண்டுபிடித்து வைத்துள்ளனர். வெளிநாடுகளின் நிறுவனங்கள் தொடங்குவது, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் முதலீடு செய்வது, பங்கு சந்தையில் முதலீடு செய்வது போன்றவைதான் அந்த வழிகள்.

வெளிநாட்டில் டம்மியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதில் இருந்து இந்தியாவில் உள்ள பண முதலைகளின் நிறுவனங்களுக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்கிறார்கள். இதற்காக வர்த்தகம் நடைபெறுவதை போல போலியாக காண்பிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள அந்த நிறுவனங்கள் நேரடியாக இந்தியாவிலுள்ள பண முதலைகள் நிறுவனங்களில் முதலீடு செய்தும் பணத்தை வெள்ளையாக மாற்றிவிடுகின்றன.

ரெகுலேட்டர் யாருமின்றி நேரடியாக பங்கு சந்தையின் மூலமாகவும் இந்தியாவின் பணக்காரர்களுக்கு சப்ளை செய்கின்றன வெளிநாட்டிலுள்ள போலி நிறுவனங்கள். இப்படித்தான் கருப்புப் பணம் வெளியே சென்று மீண்டும் வெள்ளையாக இந்தியாவிற்குள் திரும்புகிறது.

இதில் அனைத்துமே சட்டப்படி போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்கள் என்பதால், பணத்தின் சொந்தக்காரர் யார் என்பதை கண்டறிந்து தண்டனை பெற்றுத்தருவதில் நடைமுறை சிக்கல் உள்ளது.



No comments:

Post a Comment