Tuesday 29 September 2015

தொடருந்துவில் (இரயில்) பயணம் செய்வோர் குறைய கரணம் என்ன?


தொடருந்துவில் என்னதான் பயணக்கட்டணம் குறைவு, பயண அலுப்பு குறைவு, இடவசதி அதிகம், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணம் செய்யலாம் போன்ற மற்றும் பல வசதிகள் இருந்தாலும்கூட மக்கள் தொடருந்துவில் பயணம் செய்வதை படிப்படியாகக் குறைத்துக்கொண்டு வருகிறார்கள். ஒரே ஆண்டில் ஒரு கோடி அளவுக்கு குறைந்திருக்கிறது என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளகூடிய விசயம் அல்ல. இதோ அதற்கான காரணங்கள்.

1.       புறப்படும் நேரம்
ஒரு நாளைக்கு நூறு தொடருந்துகள் இயக்கப்பட்டால் அதில் தொண்ணுறு தொடருந்துகள் குறைந்தபட்சம் 3௦ நிமிடங்கள் முதல் 6 மணி நேரம் வரை தாமதமாக புறப்படுகிறது. இதுவே பயணிகளுக்கு மொட்டைத் தலையில் பச்சை மிளகாயை அரைத்தது போன்று ஆகிவிடும்.

2.       பயணச்சீட்டு குளறுபடி
நமது பயணத்திற்குத் தேவையான பயணச்சீட்டுகளை பதிவு செய்வதற்குள் நமக்கு மூன்றாம் எண் நெஞ்சு வலியே வந்துவிடும். அப்பொழுதுகூட பயணச்சீட்டு பதிவு செய்திருக்க முடியாது. அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே தொடருந்தில் பயணச்சீட்டு என்ற ரீதியில் இருக்கிறது நிலைமை.

3.       சுகாதாரம்
பெரும்பாலான தொடருந்துகளில் எலிகள் மகிழ்ச்சியாக ஓடி பிடித்து விளையாடிக்கொண்டு இருக்கும். தூசுகள் மண்டி கிடக்கும்.

நாம் அமர்திருக்கும் இருக்கைகள் உண்மையாகவே இருக்கைதானா அல்லது கல்லா என்று உட்கார்ந்த அடுத்த நொடியே யோசிக்க வைக்கும் பிறகு எப்படி அதில் இரண்டு நாட்களுக்கு மேல் பயணம் செய்வது யோசித்தால் மறுபடியும் தொடருந்தில் வரக்கூடாது என்று யோசிப்போம் அல்லவா.

அடுத்து கழிவறையும் அதில் தண்ணீர் பிரச்சனையும் அவசர காலங்களில் இந்த பிரச்சனை எதிர்கொண்டவர்கள் கண்டிப்பாக அடுத்த முறை தொடருந்தில் பயணம் செய்யமாட்டார்கள். கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு குறிபிட்ட வசதிகள்கூட இல்லை என்றால் மேல்தட்டு மக்களோ அடித்தட்டு மக்களோ யாரும் சகித்துக்கொள்ளமாட்டார்கள்.

4.       திருட்டு பயம்
எல்லா மாநிலங்களிலும் சில குறிபிட்ட இடங்களில் திருடர்கள் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கிறது இதை மாநில அரசோ, தொடருந்து காவலர்களோ கண்டுகொள்வதே இல்லையா என்று தெரியவில்லை. மேலும் இரவில் துணை இல்லாமல் குழந்தைளுடன் அல்லது தனியாக பயணம் செய்யும் பெண்களின் நிலையை யோசித்தே பார்க்கமுடியாது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் மின்சார தொடருந்தில் நான்காயிரம் மதிப்புள்ள கைபேசிக்காக ஒரு பெண்ணை தொடருந்தில் இருந்து தள்ளிவிட்ட கொடுமையை மறக்கமுடியாது.  

5.       விபத்து ஏற்பட்டால்?
விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது ஒன்றும் செய்ய முடியாது அப்படியே சாக வேண்டியதுதான், ஆம் சமிபத்தில் தமிழக கர்நாடக எல்லையான பன்னேரிகட்டா என்ற இடத்தில் விரைவு தொடருந்து ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சிலர் மாண்டனர் பலர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். விபத்து நடந்தது உறுதி படுத்திக்கொண்டு அந்த இடத்தை அடையவே மூன்று மணி நேரம் மேல் ஆகிவிட்டது மீட்பு குழுவிற்கு. அதுமட்டுமல்ல விபத்து நடந்த இடத்தையே கண்டுபிடிக்க முடியாமல் மீட்பு குழுவினர் கையை பிசைந்துகொண்டு இருந்தது வேறு கதை. சரி ஒரு விபத்து நடக்கிறது, அந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக வெளியில் இருந்துதான் உதவிகள் வரவேண்டிய நிலைமை என்றால் ஒன்றுமே செய்யமுடியாது. சிலர்(அல்லது பலர்) உயிர் போகலாம், பலர் காயம்(அல்லது படுகாயம்) அடையளாம். எனவே குறிப்பிட்ட தொடருந்தில் பயணம் செய்தவர்களோ அல்லது விபத்தில் சிக்கியவர்களோ வெளியில் இருப்பவருக்கு(1௦8, நண்பர்கள், உறவினர்கள்) தகவல் சொன்னால்தான் விசயம் வெளியேத் தெரியும். உதவிகள் கிடைக்கும் இல்லையென்றால் அதிர்ஷ்டம் இருப்பவர்கள் பிழைக்கலாம் இல்லையேல் அது அவர்கள் விதி.

6.       தொலைதொடர்பு
மேலே சொன்ன பன்னேறிகட்டா விபத்து நடந்தது அடர்ந்த வன பகுதி அங்கே எந்த செல்பேசியும் வேலை செய்யாது. அதனால்தான் விபத்து மீட்பு குழுவிற்கு விபத்து எங்கே நடந்தது என்றே தெரியாமல் திக்கற்று நின்றார்கள். அந்த தொடருந்தில் பயணம் செய்த பயணிகள் முற்றிலும் யாருடனும் தொடர்புகொள்ள முடியாதபோது அவர்களுக்கு யாரால் உதவி செய்யமுடியும்.


இன்னும் எத்தனையோ காரணங்கள் இருகின்றன போர்கால அடிப்படையில் இங்கு மேலே சொன்ன காரணங்களை கருத்தில்கொண்டு உடனே இந்த பிச்சனைகளை சரிசெய்தால் மீண்டும் ஏழைகளின் ரதம் என்ற தொடருந்து தொடர்ந்து ஓடும் இல்லையேல் சத்தமில்லாமல் தொலைந்து போகும்.  

No comments:

Post a Comment