Saturday 21 November 2015

ஸ்பெக்டர் திரைப்படம் விமர்சனம்


இந்த படம் ரிலீசுக்கு முன்பே ஒரு கின்னஸ் அவார்டை பார்சல் வாங்கி விட்டது. ஸ்பெக்டர் படத்தில் மொராக்கோவில் உள்ள எர்போட் என்ற இடத்தில் பிரமாண்டமான வெடி விபத்துக் காட்சி ஒன்று வருகிறது. இந்தக் காட்சி உலக சினிமாக்களிலேயே மிகப் பெரிதான, நீளமான வெடிப்புக் காட்சி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. படத்தில் வெறும் 7.5 விநாடி மட்டுமே வரும் இந்தக் காட்சிக்காக பல்லாயிரம் டாலர்களும் டன் கணக்கிலான வெடி பொருட்களும் செலவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கடந்த அக்டோபர் 26-ம் தேதியே வெளியான இந்தப் படம் அமெரிக்காவில் நவம்பர் 6-ம் தேதி வெளியானது. 245 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட பிரிட்டனின் மிக காஸ்ட்லி படமான இது, இன்று இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாகவே 548 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
சாதனையெல்லாம் இருக்கட்டும், முதலில் கதையைச் சொல்லுங்கள் என்பவர்களுக்கு படத்தின் கதை இதுதான்.
பிரிட்டன் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ‘M’ இன் ஆலோசனைப்படி மெக்சிகோ செல்லும் பாண்ட், அங்கு இருப்பவர்களை கொன்று, அவரிடமிருந்து தப்பிக்கும் மார்கோ சிகாரியோவை துரத்துகிறார். ஹெலிகாப்டரில் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சியில் சிகாரியோ இறந்து விட, அவரிடமிருந்து ஆக்டோபஸ் முத்திரை உள்ள ஒரு மோதிரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு லண்டன் திரும்புகிறார் பாண்ட்.
இதற்குள், பாண்டை இன்னாள் தலைவரான M சஸ்பெண்ட் செய்ய, வழக்கம் போல, எதற்கும் அலட்டிக் கொள்ளாத பாண்ட் ரோம் செல்கிறார். இதற்கிடையில், பாண்ட் வேலை செய்யும் ரகசிய குழுவான “00” ஐ காலாவதியானதாகச் சொல்லி கலைத்து விட, மும்முரமாய் திட்டம் தீட்டும் ஏஜென்ட் C,  தன் திட்டத்தின் படி, நைன் ஐஸ் என்கிற சர்வதேச உளவு நிறுவனத்தில் சேருமாறு பிரிட்டனுக்கு ஐடியா கொடுக்கிறார்.
ரோம் சென்ற பாண்ட் அங்கு சிகாரியோவை இழந்து தனிமரமாக நிற்கும் அவரது மனைவி லூசியாவை (அப்பாடாமோனிகா பெல்லூச்சி வந்தாச்சு) சந்திக்கிறார். அவர் மூலமாக ஸ்பெக்டர் மீட்டிங் பற்றி தெரிந்து கொண்டு, சிகாரியோவின் மோதிரத்தை வைத்து கூலாக அந்த மீட்டிங்கிற்கு செல்கிறார் பாண்ட். ஆனால், அங்கு குழுவின் தலைவரான ப்ளோபெல்ட்டுக்கு ஜேம்ஸ் பாண்ட் யாரென்று தெரிந்துவிட, பதறிப்போன பாண்ட், பரபரப்பான கார் சேசிங்குடன் அங்கிருந்து தப்பிக்கிறார்.
அதற்குப் பின் அக்மார்க் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடக்கும், வெடிக்கும் அத்தனையும் வெகு சிறப்பாக நடந்து முடிந்த பின் கிளைமாக்ஸ்.
முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் ப்ராஸ்னன் படம் பரவாயில்ல ரகம்தான் என்று சொன்னாலும், இதை விட்டால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாக இன்னும் இரண்டு வருடம் ஆகும் என்பதால் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் படத்தை ஆர்வமாக பார்த்து வருகின்றனர். குறிப்பாக சென்னை ரசிகர்களுக்கு முதன் முதலாக ஸ்பெக்டர் மூலம்  “ஐ மேக்ஸ்” (பிரம்மாண்ட திரையில் 64 கே அளவிற்கு துல்லியமான பிக்சர் குவாலிட்டி) அனுபவம் கிடைக்க இருப்பதால் சென்னை வாசிகள் ஸ்பெஷல் அனுபவத்துடன் திரையில் ஸ்பெக்டரை கண்டு களித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment