Tuesday, 25 November 2014

மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம்

(Source electronicb2b)

தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார்.
அதன்படி, புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்களில் கண்டிப்பாக சூரிய மேற்கூரை மின் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் படிப்படியாக இந்த அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் சோலார் பேனல்அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சூரிய மேற்கூரை ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் மின்கட்டமைப்புடன் கூடிய சூரிய மேற்கூரை அமைப்புகளை நிறுவும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. சோலார் பேனல்அமைக்கும் முறையில் 5 ஏக்கர் நிலத்தில் மெகாவாட் கணக்கில் மின்சாரம் உற்பத்தி செய்வது மற்றும் வீட்டு கட்டிடங்களுக்கு 1 கிலோ வாட் முதல் 100 கிலோ வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்வது ஆகிய 2 முறைகளில் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. வீடுகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. மாறாக ஏக்கர் கணக்கில் அமைப்பவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல்அமைக்க ஆகும் மொத்த செலவில் ரூ.47 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வீட்டு உரிமையாளர்கள் செலவிட வேண்டிவரும். அதற்கு மேல் ஆகும் தொகைக்கு மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்குகிறது.
மீதம் உள்ள தொகைக்கு மத்திய அரசிடமிருந்து 30 சதவீத மானியம் பெற்றுத்தர தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவர் தனது வீட்டுக்கு சோலார் பேனல்அமைத்து அதன்மூலம் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். ஒரு வாரத்தில் விண்ணப்பங்கள் பரிசீலித்து அனுப்பப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் www.teda.in பார்ம்ஸை கிளிக்செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக்செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்லைனிலேயே அனுப்பப்படும்.
இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள 17 கம்பெனிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும்.

தினமும் 4 யூனிட் மின்சாரம்
ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் அமைக்க நூறு சதுர அடி இடமே போதுமானது. இதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தை கொண்டு ஒரு வீட்டில் 4 டியூப் லைட்டுகள், இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருந்தால் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை கிரிட்மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும். ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்தபிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும்.

முறைகேட்டை தடுக்க ஆன்லைனில் விண்ணப்பம்
வீடுகளில் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்தால் பொதுமக்களுக்கு மின்கட்டணம் மூலம் கணிசமான பணம் மிச்சமாகும். முறைகேட்டை தடுப்பதற்காகவே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்துவிட்டால் மொட்டை மாடியை வேறு பயன்பாட்டிற்கு (துணி காயப்போடுதல், அப்பளம் காய வைத்தல்) பயன்படுத்துவது சிரமம். சூரிய சக்தி மின்சாரம் குறித்து போதிய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

கோவையை அடுத்து சென்னை
மத்திய அரசு கடந்த 2010–ம் ஆண்டு நாடு முழுவதும் 60 சூரிய மின்சார உற்பத்தி நகரங்களை அமைக்க முடிவு செய்தது. இதில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியை தேர்வு செய்தது. இதற்காக ரூ.50 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் சென்னை மாநகரையும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மின்சாரத்தை சேமிப்பதற்காக வேலூர், திருநெல்வேலி, ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டுக்கு 10 ஆயிரம் சி.எப்.எல். மற்றும் எல்.ஈ.டி. பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நடப்பாண்டு அனைத்து மாவட்டங்களிலும் 30 ஆயிரம் எல்.ஈ.டி. பல்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொறியியல் பாடத்திலும் சோலார் பேனல் குறித்து சேர்ப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.


No comments:

Post a Comment