Monday, 24 November 2014

விருச்சகம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

எதையும் திறமையாகச் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலும், பிறரை அடக்கியாளும் தன்மையும் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே!  இந்த 2015-ஆம் ஆண்டில் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருகிறது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம்செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உத்தமம். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். பொன், பொருள் சேர்க்கைகளும் அமையும். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் பணவிஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு  குரு மாற்றத்திற்குப் பிறகு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் உண்டாகும்.

ஆரோக்கியம்

உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறு, உடல் சோர்வுமந்தமான நிலை உண்டாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். இந்த வருட ஜூலை 5-ம் தேதி வரை குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடும் ஆற்றலும் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது, நெருங்கியவர்களின் பிரச்சினைகளில் தலையீடுசெய்யாதிருப்பது போன்றவை உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது வீண் அலைச்சலைக் குறைக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி, சுபிட்சம், பொருளாதார மேன்மை, திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், புத்திர வழியில் பூரிப்பு போன்றவை ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதால் கடன்களும் குறையும். உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதாலும், வரும் ஜீலை 5-ஆம் தேதி முதல் குரு ஜீவன ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நற்பலனைத் தரும்.

வேலை

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துமென்றாலும்  ஜூலை 5 வரை குரு 9-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் உண்டாகும். குரு மாற்றத்திற்குப்பின் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து, அனைவரையும் அனுசரித்து நடப்பது, மற்றவர்களுக்கும் பணி நிமித்தமாக உதவிகளைச் செய்வது போன்றவை நற்பலனைத் தரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கமானது அற்புதமான நற்பலனை உண்டாக்கும். குரு 9-ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலமான பலன்கள் அமையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வங்கிக் கடன்களும் தீரும். குரு மாற்றத்திற்குப்பின் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் போட்டி, பொறாமைகளால் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாமல் சமாளித்து விடமுடியும்.

பெண்கள்

இந்த வருடம் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவை உண்டாகலாம். கணவரை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்ற உதவும். ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குருப்பெயர்ச்சிக்குப் பின்பு எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும் சிக்கனத்தைக் கையாள்வதும் மிகவும் நல்லது.

பணம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவை சிறப்படையும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும் என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின்பு பண விவகாரங்களில் வீண் பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடுமென்பதால் பெரிய தொகைகளை தவிர்த்துவிடவும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகுமென்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளிலும் தடையும் தாமதமும் உண்டாகும். கட்சிப் பணிக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல்நிலை சோர்வடையும்.

விவசாயிகள்


விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் இருக்காது. புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். காய்கனிபூ வகைகள் மூலம் ஓரளவுக்கு லாபங்களைப் பெறமுடியும். கால்நடைகளாலும் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றாலும் லாபம் கிட்டும். ஆண்டின் முற்பாதியில் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

கலைஞர்கள்

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு சிறப்பான பலனை ஏற்படுத்தும். ஏழரைச் சனி நடைபெறுவது, தொழிலில் முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்தும் என்றாலும் குரு பலமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான வாழ்க்கையும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பின்பு எதிலும் கவனமுடன் செயல்படுவதும், உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடவும்.

மாணவர்கள்

மாணவர்களின் கல்விநிலை சற்று மந்தமாகத்தானிருக்கும். எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட முடியாத அளவுக்கு படிப்பில் கவனம் குறையும். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து வழிநடத்திச் செல்வது மிகவும் நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்க்கவும்.

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். 05-07-2015 முதல் குரு 10-ல் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. கேது 5-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது நற்பலனைத் தரும். வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment