Monday 24 November 2014

மிதுனம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)


பிறரை எளிதில் வசப்படுத்தக்கூடிய பேச்சாற்றலும் தெய்வ பக்தியும் கொண்ட மிதுன ராசிக்காரர்களே! இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உறவினர்களின் உபசரணை உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். சிறப்பான புத்திர பாக்கியத்தையும் பெறுவர். பூர்வீகச் சொத்து வழியிலிருந்த பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல் வாங்கல் யாவும் லாபம் தரும். எதிரிகள்கூட நண்பர்களாக மாறுவார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றிபல பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெற்று சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் கிட்டும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியால் பண விஷயத்தில் கவனமுடனிருப்பதும், தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது.



ஆரோக்கியம்



உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் தங்குதடையின்றிச் செயல்பட்டு நல்ல அனுகூலத்தைப் பெறுவீர்கள். மனைவி, பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். இதுவரை நீண்ட நாட்களாக தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை மேற் கொண்டிருப்பவர்களுக்கும் உடல்ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக் குறையும். உற்றார்- உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைவதால் பிரிந்தவர்களும் தேடிவந்து நட்பு பாராட்டுவார்கள். உடல் நிலையும் மனநிலையும் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும்.



குடும்பம், பொருளாதார நிலை



இந்த வருடம் முழுவதும் குடும்பச் சூழ்நிலையானது மகிழ்ச்சியளிப்பதாக அமையும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறை வேறும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சிறப்பான புத்திர பாக்கி யமும் அமையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும். பண வரவுகள் தாராளமாக அமைவதால் வீடு, மனை, வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் அமையும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் பண விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.



வேலை



உத்தியோகஸ்தர்கள் உயர்வடையும் காலமிது என்று சொன்னால் அது மிகையாகாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, கௌரவமான உயர்பதவிகள், பலரை வழிநடத்தும் நிர்வாகத்திறன் போன்றவை சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக்கொள்ள முடியும். செய்யும் பணி யாவற்றிலும் உங்கள் திறமைகள் பளிச்சிடும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும். சமுதாயத்தில் பெயர்புகழ் யாவும் உயரும்.



தொழில்வியாபாரம்



தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிட்டும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். புதிய கிளைகளை உருவாக்கும் நோக்கம், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் போன்ற யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும், தொழிலாளர்களின் ஆதரவும் மேலும் மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய புதிய வாய்ப்புகள் தேடிவருவதால் லாபமும் பெருகும்.



பெண்கள்



உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடிவந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். பண வரவுகளும் தாராளமாக அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் போன்றவை சிறப்பாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன்கள் குறையும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவியும் அமையும். ஊதிய உயர்வு கிட்டும்.



பணம்



இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சரளமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சிறப்பான லாபம் அமையும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும் என்றாலும், குரு மாற்றத்திற்குப் பின் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பதும், பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பதும் நல்லது. வீண் வம்பு வழக்கு ஏற்பட்டாலும் எதையும் எதிர் கொள்வீர்கள்.



அரசியல்வாதிகள்



அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக இருக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். மக்களின் ஆதரவால் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு உயரும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலையும் உயரும்.



விவசாயிகள்



விவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கேற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பாராத அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்ப் செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும்.



கலைஞர்கள்



கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும் ஆண்டாக இருக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தாராள தனவரவுகளும் உண்டாவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்குப் பஞ்சம் இருக்காது. ஆடம்பர கார், பங்களா போன்றவை வாங்கும் யோகம் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். நடித்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.



மாணவர்கள்



கல்வியில் சிறப்பான மேன்மை அமையும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பாராட்டுதல்களும் உங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தரும். நல்ல நட்பும் மூலம் நற்பலனை அடைவீர்கள். விளை யாட்டு போட்டிகளிலும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கமே வீசும்.


பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 05-07-2015 முதல் குரு  3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணா மூர்த்தியை வழிபாடுசெய்வது, கொண்டக்கடலை மாலை, மற்றும் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, மஞ்சள்நிறப் பூக்களால் அர்ச்சனை  செய்வது  நல்லது. வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment