நீங்க கல்யாணம் செஞ்சிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்
உலகில் ஆண்களால் 40 சதவிகிதமும், பெண்களால் 40 சதவிகிதமும், மற்ற காரணங்களால் 20 சதவிகிதமும் குழந்தைப் பேறு இல்லாமை ஏற்படுகிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும், குழந்தை இல்லாமையைப் போக்கும் அளவுக்கு நவீன சிகிச்சைகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
சாபம் அல்ல!
குழந்தை இல்லாமைக்கு முற்பிறவியில் செய்த பாவம் அல்லது சாபம் என்று நினைப்பது மிகவும் தவறானது. இத்தகைய தவறான மனப்போக்குகள் மாறி வருகின்றன. இது கணவன் & மனைவி இருவரையும் சார்ந்த பிரச்சனை எனப் புரிந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது ஆரோக்கியமான விஷயம். இதனால் கணவன் & மனைவி இருவரும் சேர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
எப்போது டாக்டரிடம் செல்ல வேண்டும்?
புதிதாகத் திருமணம் செய்து கொள்வோர் எந்தவிதக் கருத்தடைச் சாதனங்களையும் பயன்படுத்தாமல், ஒரு வருடம் தாம்பத்ய உறவை மேற்கொண்டும் கூட கருத்தரிக்கவில்லை என்றால், குழந்தைப்பேறு இல்லாமைக்கான காரணம் இருப்பதாகக் கொள்ளலாம். இத்தகையோர் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரிடம் உடனடியாகச் செல்வது அவசியம்.
இயல்பாக கரு உருவாதல் குழந்தைப்பேறு கிடைப்பதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ ரீதியாகச் சம பங்கு உள்ளது. அதாவது போதுமான அளவுக்கு நல்ல விந்து அணுக்களை ஆண் உற்பத்தி செய்து, பெண்ணின் கர்ப்பப் பைக்குள் கொண்டு சேர்க்கும் தன்மை உடையவராக இருக்க வேண்டும். அந்த விந்தணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவையாக இருக்க வேண்டும்.
இதே போன்று, ஒரு பெண்ணுக்கு கருமுட்டையின் உற்பத்தி சரியாக இருக்க வேண்டும். அது கர்ப்பப் பைக்கு வரும் வழி அடைப்பு இல்லாமல் இருக்க வேண்டும். கருமுட்டையையும், விந்தணுவையும் ஏற்ற கருவை வளர்க்கக் கூடிய வலுவான நிலையில் கர்ப்பப்பை இருக்க வேண்டும்.
மேலே சொன்னவை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான அடிப்படை விஷயங்களில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அது குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.
புகை வேண்டாம்
விந்து அணுக்கள் குறைவாக இருத்தல், உயிர் அணுக்கள் இல்லாமல் இருத்தல் ஆகியவை ஆண்களைப் பொறுத்தவரை, பொதுவாக குழந்தை இல்லாமைக்குக் காரணமாக அமைகிறது. இது தவிர சிகரெட்டும் முக்கிய காரணம். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் உயிர் அணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், அதன் ஊர்ந்து செல்லும் தன்மையையும் வடிவத்தையும் பாதிக்கிறது. சர்க்கரை நோயும் ஆண்மைக் குறைவுக்குக் காரணமாக அமைந்துவிடும்.
இவை தவிர, உணவில் புரதச் சத்துக் குறைவு, வைட்டமின் இ, பி. காம்ப்ளக்ஸ் குறைவு போன்றவை, விந்தணு குறைவுக்குக் காரணங்களாக இருக்கின்றன.
பெண்களைப் பொறுத்தவரை பொதுவாக ஹார்மோன் குறைபாடுகளே குழந்தை இல்லாமைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஹார்மோன் குறைபாடு காரணமாக, கருமுட்டைகள் உற்பத்தியாகாத நிலை, கர்ப்பப்பை வளர்ச்சி இன்மை ஆகியவை ஏற்படுகின்றன. ரத்தசோகை, புரதச்சத்துக் குறைவு ஆகியவையும் பெண்களுக்கான குறைபாட்டுக்கான காரணங்கள்.
நவீன சிகிச்சைகள் என்றால் என்ன?
குழந்தை இல்லாமைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, நவீன முறையில் சிகிச்சை அளித்து குழந்தைப் பேறை உருவாக்கும் அளவுக்கு மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1973&ம் ஆண்டில் ‘டெஸ்ட்டியூப் பேபி’ எனப்படும் சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டது. லண்டனில் உள்ள ‘பான்ஹால்’ மருத்துவமனையில் 1978 ஜூலை 25&ம் தேதியன்று முதல் சோதனைக்குழாய் குழந்தை பிறந்தது. முதல் அதிசயக் குழந்தைக்கு ‘லூயிஸ் பிரவுன்’ எனப் பெயரிட்டனர். இச்சாதனையைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கும் வசதி படைத்த மருத்துவமனைகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் 3 லட்சத்தைத் தொட்டுவிட்டது.
ஐ.வி. எஃப் முறை (I.V.F.)
பெண்ணின் கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுவிட்டால், விந்தணுக்கள் அதன் வழியே சென்று கருமுட்டையை அடைய முடியாது. இதற்குத் தீர்வு காண்பதற்காகவே ‘ஐ.வி.எஃப்’ முறை என்ற சோதனைக்குழாய் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறையில் பெண்ணின் முட்டைப்பை ஊக்குவிக்கப்படும். பின்னர், சேகரித்த முட்டைகளை தரமான உயிர் அணுக்களுடன் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கரு உருவாக்கப்படும்.
நன்கு வளர்ந்த தரமான கரு, பின்னர், ஊசி மூலம் கருப்பையினுள் நேரடியாகச் செலுத்தப்படும். கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள் பிள்ளை பெறமுடியாது என்ற நிலையை ஐ.வி.எஃப். முறை தகர்த்தது.
இக்ஸி சிகிச்சை முறை (I.C.S.I.)
சோதனைக் குழாய் முறையில் பெண்ணின் கருமுட்டையையும் ஆணின் விந்து அணுக்களையும் ஒன்றாக இணைத்து, கருவை உருவாக்குவதற்கு சில 100 நல்ல விந்தணுக்கள் தேவைப்பட்டன. ஆனால் ‘இக்ஸி’ முறையில், கருவை உருவாக்க ஒரே ஒரு நல்ல விந்தணுவே போதுமானது. விந்துப் பையிலிருந்து இந்த விந்து அணுவை எடுக்கவும் சாத்தியம் உள்ளது. மேலும் ‘ஐ.வி.எஃப்’ சிகிச்சை முறையினால் குழந்தை பெறுவதற்கான வெற்றி வாய்ப்பு 30 சதவீதம்தான் கிடைத்தது. ஆனால் இக்ஸி முறையில் வெற்றி வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த முறை 1992 முதல் பிரபலமாகத் தொடங்கியது. இந்த நவீன சிகிச்சை முறைகள் மூலம் ஆண், பெண் இருவரின் குறைபாட்டை 100 சதவீதம் போக்கி சிகிச்சை அளிக்க முடியும்.
No comments:
Post a Comment