Wednesday, 5 November 2014

தாய்ப்பாலின் மகத்துவம்


தாய்ப்பாலின் மகத்துவம்



விளையாட்டில் ஒரே ஒரு பந்துகூட வெற்றியைத் தீர்மானித்துவிடும். அதேபோல குழந்தையின் வெற்றிகரமான வளர்ச்சிக்கான முதல்படி தாய்ப்பால் ஊட்டுவது தான்! வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் அனுசரிக்கப் படும் உலக தாய்ப்பால் வாரத்தின் இந்த ஆண்டுக்கான மையக் கருத்து ‘Breast feeding - A Winning goal for life'. புத்தாயிரம் ஆண்டில் புத்தாயிர வளர்ச்சி இலக்குகள்' (Millenium Development Goals - MDG) என்ற பெயரில் மக்களின் நல்வாழ்வுக்கான முக்கியச் செயல்பாடுகள், தரக்குறியீடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றை 2015-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற முனைப்புடன் ஐக்கிய நாடுகள் சபை செயல்பட்டு வருகிறது.
குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள்வரை தாய்ப்பால் மட்டும் தந்து, பிறகு இணை உணவுடன் தாய்ப்பாலும் சேர்த்துத் தரப்பட்டால், எம்.டி.ஜி. குறியீடுகளை எளிதாக அடையலாம் என்பதை விளக்குவதே இந்த வருடத்தின் மையக் கருத்து:
பசியைப் போக்கும்

குழந்தையின் பசியைப் போக்கவல்லது தாய்ப்பால். குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளன. அதில் செறிந்திருக்கும் புரதச்சத்து, நுண்ணூட்டச் சத்துகள், லாக்டோஸ் மாவுச்சத்து, கொழுப்பு வகைகள் போன்றவை குழந்தை வளர்ச்சிக்குக் கட்டாயம் தேவை. முறைப்படி தாய்ப்பால் தரப்பட்டால் 40 சதவீதக் குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கலாம். தாய்ப்பால் இயற்கையானது, செலவில்லாததும்கூட. வறுமையில் வாடும் தாய்கூடத் தாய்ப்பால் மூலம் தன் குழந்தைக்கு இயற்கையான ஊட்டச்சத்தைத் தர முடியும்.

அறிவு வளர்ச்சி

தாய்ப்பால் தருவதால் அம்மா வுக்கும் குழந்தைக்கும் பாசப் பிணைப்பு ஏற்பட்டு Taurine, Cystine போன்ற அமினோ அமிலங்கள், Decosa hexainoic acid (DHA) எனப் படும் கொழுப்புச்சத்து போன்றவை கிடைக்கும். இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரித்து ஐ.க்யூ. பெருகுகிறது. இது கல்வி கற்பதில் ஈடுபாட்டை அதிகரிக்கும்.

சுயமதிப்பு

பொதுவாகத் தாய், தன் குழந்தைகளிடையே ஆண், பெண் பேதம் பார்ப்பதில்லை. குழந்தையை மார்போடு அணைத்துப் பால் தரும் பெருமையும் உரிமையும் தாய்க்கு மட்டுமே உரியது. தாய்ப்பால் இயற்கையின் பரிசு! இதனால் தாயின் சுயமதிப்பு (Self Esteem) அதிகரிக்கும். அத்துடன், வீட்டில் குழந்தைக்கு உணவு தயாரித்துத் தருவதும் தாய்தான். இதன்மூலம் தன் ஆளுமையைத் தாய் பெரிதாக உணர்கிறாள்.

இறப்பைத் தடுப்பது

குழந்தை பிறந்த 1 மணி நேரத்தில் சீம்பால் தருவதால் 10 லட்சம் குழந்தைகள் இறந்துபோவதைத் தடுக்கலாம். சீம்பாலில் தொடங்கி 6 மாதங்கள்வரை தாய்ப்பால் மட்டுமே தருவதால், குழந்தையின் உடலில் அதிகமான நோய் எதிர்ப்புச்சக்தி சேரும். வயிற்றுப்போக்கு, சுவாசப் பாதை தொற்று, காதில் சீழ் வடிதல், தோல் தொற்று போன்றவை தடுக்கப்படும். முக்கிய மருத்துவ இதழான லான்செட்டில் வெளியான ஒரு கட்டுரையின்படி, தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைவு.

தாய் நலம்

தாய்ப்பால் தரும் தாய்க்கு, பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் அதிக உதிரப் போக்கு (Post Partum Hemorrhage) தடுக்கப்படுகிறது. தாய்க்கு மார்பகப் புற்றுநோய், சினைப்பைப் புற்றுநோய், எலும்புச் சத்துக்குறைவு (Osteoporosis) போன்ற நோய்கள் வெகுவாகக் குறையும். தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் நலமும் காக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தாய்ப்பால் தருவதால் தண்ணீர், எரிபொருள் சேமிக்கப்படுகிறது. பிளாஸ்டிக், அலுமினியக் கழிவுகள் குறைகின்றன. பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை, அதைச் சந்தைப்படுத்துவதற்கான போக்கு வரத்து போன்றவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் குறையும்.

நமது எதிர்காலத் தலைமுறை யைக் காப்பாற்றும் தாய்ப்பாலுக்கான வார விழாவை வெற்றிபெறச் செய்ய நாமும் கைகொடுப்போம்.

உலகிலேயே சிறந்த உணவு

உலகிலேயே கலப்படம் செய்ய முடியாத ஓர் உணவு உண்டென்றால் அது தாய்ப்பால்தான். ஒரு குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவும் அதுதான்.

சீம்பாலின் மகிமை

குழந்தை பிறப்புக்குப் பிறகு, சில நாட்கள் மார்பகங்கள் பாலைச் சுரப்பதில்லை. சீம்பாலைத்தான் சுரக்கின்றன. மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது எனச் சில முதியவர்கள் கூறுவார்கள். அதனால் முதல் மூன்று நாட்களுக்குத் தாய்ப்பால் புகட்டக்கூடாது என்றும் கூறுபடுவது உண்டு. ஆனால், இது பெரும் தவறு. குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், நோய்த் தொற்றுகளை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு ஊக்கிகளும் சீம்பாலில் அதிகம் இருப்பதால் அதைக் கட்டாயம் புகட்ட வேண்டும்.

குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது மிகப் பெரிய இன்பம். தொடக்கத்தில் இது சரியாக அமையவில்லையென்றால், அதற்காக நம்பிக்கை இழக்க வேண்டாம். தொடர்ந்து விடா முயற்சியுடன் மேற்கொண்டால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாம்.

சுத்தம் அவசியம்

மார்பகங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றைத் தாங்கி நிற்பதற்குப் போதுமான ஆதாரங்களை வழங்கவும், தேவையான பராமரிப்பையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். சுத்தமான நீரினால் மார்புக் காம்புகளைச் சுத்தப்படுத்த வேண்டும். சோப்பைப் பயன்படுத்தக்கூடாது.
தாய்ப்பால் ஊட்டும் முதல் சில மாதங்களுக்கு இரவு, பகல் என இரண்டு வேளைகளிலும் நல்ல உள்ளாடையை அணிய வேண்டும். அது மார்பகங்களைத் தாங்குவதாக இருந்தால்தான் செளகரியமாக இருக்கும். மார்பகங்களுக்குள் காற்று முழுமையாகச் சென்றுவர, நைலானைவிட பருத்தியாலான உள்ளாடையே சிறந்தது. குழந்தைக்குப் பாலூட்டும் காலத்தில் அணிவதற்கென்றே தயாரிக்கப்பட்ட பிரத்யேகமான உள்ளாடையை அணிவதும் நல்லது.

பராமரிப்பு

தாய்ப்பால் சுரக்கும்போது மார்பகங்கள் பெரிதாகவும், கனமாகவும் இருக்கும். அதனால் தொடக்கத்தில் அசெளகரியமோ, வலியோ தோன்றலாம். அப்போது காம்புகளிலிருந்து அதிகமாகப் பால் ஒழுகிப் புண்ணாவதைத் தவிர்ப்பதற்கு, சுத்தமான துணியால் துடைத்து உலர்வாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பால் புகட்டுதல்

குழந்தைக்கு எந்த நிலையிலிருந்து (பொசிஷன்) பால் கொடுக்க வசதியாக இருக்கிறது என்பதைப் பரிசோதித்து உறுதி செய்துகொள்ளவும். குழந்தையை மடியில் படுக்க வைத்துப் பாலூட்டுவதை வசதியாகக் கருதினால், குழந்தையின் தலை உயரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் உட்புறக் காதுகளுக்கும் தொண்டைக்கும் இடையே மிகக் குறைந்த இடைவெளியே இருப்பதால், குழந்தையின் காதுக்குள் கிருமிகள் நுழையக்கூடும். சிலசமயம் தீவிரமான காது தொற்று நோய் ஏற்பட இது வழிவகுக்கும்.

அழுகை ஏன்?

குழந்தை எப்போதெல்லாம் உணவருந்த விரும்புகிறதோ, அப்போதெல்லாம் பால் புகட்டுவது நல்லது. தொடக்கத்தில் அடிக்கடி இப்படி இருக்கக்கூடும். முதல் சில வாரங்களில் இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை உணவு கேட்கக்கூடும். பால் ஊட்டுவதற்காகத் தூக்கக் கலக்கத்துடன் குழந்தையை எழுப்ப வேண்டியிருக்கும். அதேநேரம் குழந்தை அழுதால், பசிக்குத்தான் அழுகிறது என்று நினைக்கக்கூடாது. வயிற்று வலி, சிறுநீர்-மலம் வெளியேறிய உள்ளாடை ஆகியவற்றாலும்கூட அழலாம். எதற்காக அழுகிறது என்பதைத் தாய்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

எத்தனை முறை?

எத்தனை நேரம் பாலூட்ட வேண்டும் என்பதைக் குழந்தையே தீர்மானிக்கட்டும். குழந்தை போதுமான அளவு பால் அருந்துகிறது என்பதை உறுதிப்படுத்தும் வழி, அதன் எடை அதிகரிப்பதுதான். குழந்தையை மருத்துவரிடம் கூட்டிச் செல்லும்போது, ஒவ்வொரு முறையும் எடை பார்க்கவும். ஒரு குழந்தைக்குப் பாலூட்டுவதற்கான நல்ல அட்டவணை, 24 மணி நேரத்தில் ஆறு முறை பாலூட்டுவதுதான். அதற்குக் குறைவாக இருந்தால் குழந்தைக்குப் பசியின்மை இருக்கிறது என்று அர்த்தம்.

பால் சுரக்க

முதலில் உங்கள் குழந்தைக்குப் போதுமான பால் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். எனவே, குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையிடம் மார்பகத்தைத் திறந்து விடுங்கள். குழந்தை உறிஞ்சும்போது தாய்க்குப் புரோலாக்டின் என்ற பால்சுரப்பு ஹார்மோன் விடுவிக்கப்படுவதால், பால் சுரப்பது அதிகரிக்கும்.

அசெளகரியம்

குழந்தைகள் சாப்பிடும்போது அவ்வப்போது காற்றையும் சேர்த்து விழுங்கிவிடும். பால் அருந்திய பிறகு, குழந்தையைத் தோளில் போட்டு முதுகின் மீது லேசாகத் தட்டிவிட்டாலோ அல்லது மடியில் குழந்தையை நிமிர்த்தி உட்கார வைத்துப் பிடித்துக்கொண்டாலோ குழந்தைக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் காற்று வெளியேறும்.

தாய்ப்பால் ஏன் சிறந்தது?

தாய்ப்பால்தான் குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவு. இதில் ஒப்பிட இயலாத பல பண்புகள் உள்ளன. அது குழந்தைக்கு முற்றிலும் பாதுகாப்பானது. தீங்கு செய்யும் பாக்டீரியாக்களும் மற்றக் கிருமிகளும் அதில் சேரவே முடியாது.

இருமல், சளி, மார்பு நோய் போன்ற சில நோய்த் தொற்றுகளில் இருந்து குழந்தைக்கு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியைத் தாய்ப்பால் அளிக்கிறது. குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் அதில் அடங்கியிருக்கின்றன. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும். வயிற்றுப் பிரச்சினை எதுவும் ஏற்படாது. ஆஸ்துமா, எக்சிமா போன்ற ஒவ்வாமைகளால் பாதிக்கப்படுவதும் மிகக் குறைவு. அனைத்துக்கும் மேலாகக் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பிரத்யேகமான பாசப் பிணைப்பைத் தாய்ப்பால் ஏற்படுத்துகிறது. இது குழந்தையின் மனநிலையில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

உதவிகரமான மருத்துவ செய்திகளுக்கு இந்த சுட்டியில் சென்று பார்க்கவும்
For more helpful medical related posts, please click this link

No comments:

Post a Comment