Saturday, 29 November 2014

ஒரே ஒருவரிடம்தான் ஆட்டோகிராப் வாங்கியுள்ளேன்- ரஜினிகாந்த்



கன்னட நடிகர் ராஜ்குமாரின் நினைவு மண்டபம், சிலை திறப்பு விழாக்கள், பெங்களூரு, நந்தினி லே-அவுட் பகுதியிலுள்ள அவரது நினைவிடத்தில் இன்று நடந்தன. ராஜ்குமார் நினைவிடத்தில் அணையா தீபம் ஏற்றப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜார்ஜ், செய்தி விளம்பர துறை அமைச்சர் ரோஷன் பெய்க், எம்.எல்.ஏக்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை சரோஜாதேவி, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். 

விழாவில் சிறப்புரையாற்றிய ரஜினி பின்வருமாறு கூறினார் 

"1927ல் பிரம்மா தேன் ஒன்றை உருவாக்கி அதை மேகத்தில் தூவினார். அந்த தேனுக்கு கலைகளின் தலைவி சரஸ்வதி ஆசிர்வாதம் செய்தார். அந்த மேகத்தில் இருந்து தேன் மழை எங்கு பெய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தபோது, கர்நாடகாவுக்கு அந்த புண்ணியம் கிடைத்தது. கன்னட மண்ணில் தேன் மழை விழுந்தது. ரங்கமந்திராவில் நடிப்பு பயிற்சி பெற்று, ஒரு மனிதனாக உருவாகி 1954ல் சினிமா உலகில் குதித்தது அந்த மழை. அந்த தேன் மழையின் பெயர்தான் ராஜ்குமார்

பேடர கண்ணப்பா என்ற படத்தில் தொடங்கி ராஜ்குமார் என்ற குதிரை ஓடத் தொடங்கியது. 1954ல் தொடங்கிய ராஜ்குமார் என்ற குதிரையின் சினிமா பயணம் 2008ல் முடிந்தது. 54 வருஷம் திரையுலகில் அவர் இருந்தார். புரந்தரதாசர், கனகதாசர் உள்ளிட்ட பல ஞானிகள் (கதாப்பாத்திரங்கள்) அந்த குதிரையின் முதுகில் ஏறி பயணித்தனர். ராவணன், இரண்யன், மகிஷாசூரன் போன்ற கொடும் அரக்கர்களும் அந்த குதிரையின் முதுகில் பயணித்தனர். ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் கூட ராஜ்குமார் நடித்துள்ளார். கர்நாடகாவில் எந்த மூலைக்கு சென்றாலும் அந்த குதிரைக்கு அபார வரவேற்பு கிடைத்தது. ராஜ்குமார் மறைவுக்கு பிறகு இந்த அசுரர்களும், ஞானிகளும் எந்த ஒரு குதிரை மீதும் ஏறவில்லை. ஏனெனில் அதுபோன்ற கனமான பாத்திரங்களை சுமக்கும் சக்தி ரஜினிகாந்த் உட்பட வேறு எந்த குதிரைக்கும் (நடிகர்களுக்கும்) இல்லை. ஓடி, ஓடி களைப்படைந்த அந்த குதிரை, தனது தாய் மண்ணில் ஓய்வெடுக்கலாம் என்று சென்றது. ஆனால், அந்த குதிரையை வனதேவதையும் பார்க்க ஆசைப்பட்டாள். 

எனவேதான் 108 நாள் வனதேவதையுடன் (வீரப்பன் கடத்தல் சம்பவம்) அவர் இருந்தார். எனக்கு 11 வயதாக இருக்கும்போது நான் பள்ளிக்கூடம் சென்ற காலகட்டத்தில் ராஜ்குமாரிடம் ஆட்டோகிராப் வாங்கினேன். அதன்பிறகு வாழ்க்கையிலேயே இதுவரை வேறு யாரிடமும் நான், ஆட்டோகிராப் வாங்கியதில்லை. பெங்களூரு டாடா இன்ஸ்டிடியூட்டிற்கு ஒருமுறை ராஜ்குமாருடன் சென்றிருந்தேன். அப்போது ராஜ்குமாரை பார்த்த மக்கள் அவரிடம் வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்து சென்றனர். அப்போது என்னை பார்த்து ராஜ்குமார் ஒருவார்த்தை கேட்டார். 

ஏன் எனக்கு அவர்கள் வணக்கம் செலுத்துகிறார்கள் தெரியுமா என்றார்? நான் அதற்கு, உங்களுக்கு மரியாதை கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பார்கள் என்று பதிலுக்கு கேட்டேன். அதற்கு ராஜ்குமார் சிரித்துக் கொண்டே, "மக்கள் எனக்கு மரியாதை தருகிறார்கள் என்றா நினைத்தாய். எனக்குள் உள்ள சரஸ்வதிக்குதான் அவர்கள் மரியாதை தருகின்றனர். அந்த கலைவாணியால்தான் நடிப்பு நமக்கு சாத்தியப்பட்டுள்ளது. ரசிகர்களை நம்மை பார்த்து கை தட்டுவதை நமக்கு கிடைக்கும் மரியாதை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் நமக்கு அகங்காரம் வந்துவிடும். கலாதேவிக்கே அனைத்து புகழும் சென்றடைய வேண்டும்" என்றார். 

எந்த ஒரு கட்சியிலும் சேராமல், அரசியலில் குதிக்காமல் மக்களுக்கு நன்மை செய்யமுடியும் என்று நிரூபித்தவர் ராஜ்குமார். ராஜ்குமார் இறந்ததும் உடனே என்னால் வர முடியவில்லை. ராஜ்குமார் மறைவின்போது அனைத்து ரசிகர்களும் தங்கள் கையால் அவரது சமாதியில் மண்போட வேண்டும் என்று கலாட்டா செய்தனர். இனியாவது ரசிகர்கள் அமைதியாக இருங்கள். ராஜ்குமார் நினைவிடத்தில் ஒரு ரிஷி படுத்துள்ளார் என்று நினையுங்கள். மவுனமாக வாருங்கள். போய் அவரிடம் பேசுங்கள். உங்களுக்கு ஆசி வழங்குவார். வருங்காலத்தில் இது ஒரு கோயிலாக மாறி உங்களுக்கு ஆசி வழங்கும். இவ்வாறு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.

No comments:

Post a Comment