Monday, 3 November 2014

ஒகேனக்கல்



இந்தப் பயணம் கிருஷ்ணகிரி மாவட்டம் இராயகோட்டையில் ஆரம்பித்து பாலக்கோடு வழியாக தர்மபுரி சென்று, அங்கிருந்து ஒகேனக்கல் சென்றோம். இந்தப் பயணம் முழுவதும் பேருந்துப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. பென்னாகரம் என்ற சிறிய நகருக்குச் செல்லும்வரை அங்கும் இங்குமாக ஒருசில வீடுகளே காணமுடிந்தது.

பென்னாகரத்தில் ஒரு பத்து நிமிடங்கள் நின்றது. பேருந்து நேரக்காப்பாளர்கள் ஒலிபெருக்கியில் பேருந்து நேரம் செல்லுமிடமெல்லாம் அறிவித்தார்கள், ஆச்சர்யம்தான் பெரியப் பெரிய பேருந்து நிலையங்களிலேயே இப்படி அறிவிப்புகள் கிடையாதே!.

 பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து கிளம்பியது, சற்று நேரத்திற்குள்ளாகவே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் நடுவே செல்ல ஆரம்பித்ததும், பச்சை நிறச் சேலை உடுத்தி இயற்கை அன்னை நம்மை அன்புடன் வரவேற்றாள். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வீடுகள் அறவே காணமுடியவில்லை. எப்போதோ ஒன்றோ இரண்டோ வாகனங்கள் நம்மை கடந்து சென்றது. சற்றுத்தொலைவு கடந்து வனச்சரகம் சார்பில் நுழைவுக்கட்டணம் பெற்றுக்கொண்டு ரசிது கொடுத்தார்கள். இரண்டுச் சக்கர வாகனத்திற்கு கட்டணம் இல்லையா என்றுத்தெரியவில்லை. பேருந்தும் கிளம்ப இரம்யமான இயற்கையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பது உறுதி. ஒகேனக்கல்லை நெருங்க காவல் நிலையம் இடதுபுறத்தில் தென்பட்டது. இரண்டு நிமிடத்தில் பேருந்து நிலையம் அடைந்துவிட்டோம்.

ஆச்சரியம்! பேருந்து நிலையதிற்கு உள்ளேயே சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடமும் ஒதுக்க பட்டிருந்தது. தலா ஒரு தமிழ்நாடு, கேரளா சுற்றுலாப் பேருந்துகள் இருந்தன. கர்நாடகாவில் இருந்து நீர் திறந்துவிட்டால் அரசுப்பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. பேருந்துகளை நம்பி இங்கு வரலாம். என்னைபொறுத்தவரை இங்கே வருபர்வர்கள் இருச்சகர வாகனத்தில் வரவேண்டாம் இந்த பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும் அருவியில் குளித்துவிட்டு திரும்பச்செல்லும்போது சற்று சிரமமாகவே இருக்கும் அல்லது உங்கள் விருப்பம். வாகனங்களில் வரும்போது வளைவுகளில் கவனம் தேவை இல்லையென்றால் விபத்து சாதாரணமாக நடக்க நீங்களே காரணம். விபத்து ஏற்பட்டால் முதலுதவி கிடைக்கவே பல மணி நேரம் போராடவேண்டியிருக்கும், எந்த அரசு, தனியார், சுற்றுலாப் பேருந்துகளும் நிற்காது. Bsnl, aircel, airtel போன்ற செல்பேசிகளுக்கு சமிஞை கிடைக்கலாம் ஆனால் உறுதியில்லை.

காவிரி ஆற்றில் நன்றாகவே நீர் வரத்து இருந்தது(கர்நாடகாவில் நல்ல மழை), வாரநாள் (செவ்வாய்) என்பதால் கூட்டம் சற்று குறைவே. பலர் குடும்பம் நண்பர்கள் சகிதமாக பரிசலில் சென்று மகிழ்தனர். சிலர் குழுக்களாக சிறுவர் பூங்காவில் அமர்து உணவுவை ருசி பார்த்தனர். வழக்கம் போல சாப்பிட்டு குப்பைகளை ஆங்காங்கே போட்டுவிட்டு கிளம்பினார்கள். நானும் என் நண்பன் இரஜினியும் நுறு ரூபாய்க்கு எண்ணையில் பொறித்த ஆறு மீனை வாங்கினோம். பேரம் பேசினால் விலைகுறைத்து வாங்கலாம். அது உங்கள் சாமர்த்தியம். மேலும் சிலர் மீன் வாங்கித்தந்தால் சமைத்துத் தருவதாக சொல்வார்கள் விருப்பம் இருப்பவர்கள் அவர்களிடம் பேரம் பேசி சமைக்கச் சொல்லிவிட்டு நீங்கள் சுற்றி பார்த்துவிட்டு வருவதற்குள் சமைத்துவிடுவார்கள், பிறகென்ன மீன் குழம்பு சோறு இரண்டையும் ஒரு பிடி பிடித்து விடலாம் (இதேபோல் கரூர் மாவட்டம் ஜேடர்பாளையம் ஆற்றிலும் சமைத்துத் தருவார்கள், காவிரி நீர்தான் மேட்டூர் அணையிலிருந்து இங்கு வருகிறது).

நங்கள் இரண்டு பேரும் ஆற்றை பார்த்து கொண்டே மீனை ருசி பார்த்துவிட்டு குளிக்கத்தோதான இடம் பார்க்க சுற்றினோம். ஐந்து அருவியை பார்க்கலாம் என்று சென்றோம் ஆனால் செல்லமுடியவில்லை. கரணம் ஐந்து அருவி இருப்பது கர்நாடகா பகுதி, அவர்கள் வழியை அடைத்துவிட்டனர். பாலத்தில் ஏறி ஐந்து அருவியை ரசிக்கலாம். கட்டணம் 5 ரூபாய். ஒரு சில புகைப்படங்களை எடுத்துகொண்டோம். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என நிறைய சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். இதுபோக இரண்டு பெண் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வந்திருந்தார்கள், உடன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இடத்தை சுற்றிக்காட்டிகொண்டிருந்தார். அவர்களின் பயண அனுபவத்தை கேட்கலாம் என்று நினைத்தேன் ஆனால் ஒரு முறை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சென்றபோது நான் பார்த்த அனுபவத்தால் அவர்களிடம் பேசாமல் பின்வாங்கினேன்.

பிறகு அருவியின் அருகில் சென்று பார்த்தோம், இரும்பு கம்பி வேலி அமைத்து இருந்தனர். ஆண்களும், பெண்களும் அருவியில் ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்தனர். தனித்தனியாக குளிக்க இடம் இல்லை. உடை மாற்ற இரண்டு அறைகள் இருந்தன, பெண்கள் பயன்படுத்திக்கொண்டு இருந்தனர். ஆண்கள் அருவிக்கு அருகிலேயே உடை மாற்றிக்கொண்டு தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக காத்திருந்தனர். வழக்கம்போல சிலர் ஆற்றில் துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது என்று அவர்கள் வேளையை பார்த்தனர்.

குளிக்க நன்றாக இடம் கிடைத்தது, இரண்டு மணி நேரம் நன்றாக குளித்தோம். மனதிற்கு நன்றாக இருந்தது. சாப்பிடலாம் என்று நினைத்தோம் ஆனால் இங்கிருக்கும் கடைக்களில் சாப்பாடு எப்படி இருக்குமோ என்ற பயத்தால் சாப்பிடவில்லை. பேருந்து நிலையங்களிலேயே கட்டண கழிப்பிடங்கள் இருந்தன. உள்ளே நுழைய 5 ரூபாய் தரவேண்டும்!, சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், குளிக்கவும் அறை என எல்லாம் 5 ரூபாயில் அடக்கம்!.

மாலை நான்கு மணிக்கு பாலக்கோடு வழியாக கிருஷ்ணகிரிக்கு ஒரு பேருந்து இருந்தது. ஏறிகொண்டோம், அந்த வெளிநாட்டு பயணிகளும் அந்தப் பேருந்தில்தான் இருந்தனர். பென்னாகரம் செல்லும்வழியில் ஒரு சரக்கு லாரி பள்ளத்தில் கவிழ்ந்துகிடந்தது, பார்க்கவே சற்று பயமாகத்தான் இருந்தது. பின்னர் பாலக்கோட்டில் இறங்கினோம். அவர்களும் இறங்கினார்கள், அவர்களை சுற்றுலா வழிகாட்டி அழைத்துச்செல்வதை பார்த்துவிட்டு திரும்பினோம் இராயகோட்டைக்கு பேருந்து வந்தது, அதில் ஏறி  மாலை 5.30 க்கு வீடு திரும்பினோம்.

குறிப்பு :
1.      முதல் முறை வருபர்கள் தர்மபுரி வந்து பென்னாகரம் வழியாக   செல்வது நல்லது, பேருந்து வசதியும் இருக்கிறது.

2. பெங்களுருவில் இருந்து வருபர்கள் ஓசூர் – இராயகோட்டை – பாலக்கோடு வழியாக பென்னாகரம் – ஒகேனக்கல் வரலாம். பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மி தொலைவு சென்றால் வலது பக்கமாக ஒரு சாலை பிரியும், அதுதான் பென்னாகரம் சாலை. 

No comments:

Post a Comment