நஷ்டத்தில் இருந்த நடிகர் சங்க நிதியை நாங்கள் தற்போது 3½ கோடி நிதி இருப்பு இருக்கும் வகையில் உயர்த்தி உள்ளோம் நடிகர் சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. இதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவி வருகிறோம். மீதி உள்ள நிதியை வைத்து நடிகர் சங்க இடத்தில் கட்டிடம் கட்டி அதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். அதன் அடிப்படையில் திரைப்பட துறையில் தொடர்பு உள்ள சத்யம் நிறுவனத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கினோம். இதில் 15 கோடி நடிகர் சங்கத்தின் நிதி. மீதி 50 கோடி நிதி சத்யம் நிறுவனத்தினுடையது. இதன் மூலம் நடிகர் சங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வாடகை வரும்.
மொத்தம் 29 வருடம் 11 மாதத்திற்கு லீசுக்கு விடுகிறோம். இதன் முடிவில் ரூ.170 கோடி நடிகர் சங்க சொத்து மதிப்பு உயர்ந்திருக்கும். இதை பொதுக்குழுவில் கூடி அனுமதி பெற்று தான் செய்துள்ளோம். நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் ஒரு பிடி மண்ணை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் விஷால் எனக்கு நோட்டீஸ் அனுப்புவதாக கூறுவது சரியல்ல. விஷாலுக்கு தான் நாங்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும்.
பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் இதைப்பற்றி கேள்வி கேட்கக்கூடாது. விஸ்வரூபம் படப்பிரச்சினையில் ஒரு நாள் இரவு முழுவதும் கமலுடன் அமர்ந்து நானும் ராதாரவியும் பேசினோம் என்பது விஷாலுக்கு தெரியவில்லையா? பூச்சி முருகன் என்பவர் அவருக்கு பதவி வழங்கவில்லை என்பதற்காக வழக்கு போட்டுள்ளார். நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குறை கூறும் அவரை கண்டிக்காமல் விஷால் தவறான தகவலை கூறினால் அவர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். இனியும் இது போன்று செயல்பட்டால் விஷாலை சங்கத்தில் இருந்து நீக்குவோம் என்று எச்சரிக்கிறேன். விஷால் இவ்வாறு செயல்படுவதற்கு பின்னணி உள்ளதா என்பது எனக்கு தெரியாது என சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment