(Image transparent)
இன்றைய உலகமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் படிப்பு, வேலை, வியாபாரம் என அனைத்திற்கும் அடிப்படை ஆங்கிலம் என்ற நிலை உருவாகிவிட்டது. எந்த மொழியையும் எளிதில் கற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படித்தால் ஆங்கிலத்தை எளிதில் கற்றுக்கொள்ளலாம்.
முதலில் ஆங்கிலம் ஒரு அன்னிய மொழி, நம்மால் படிக்க முடியாது போன்ற எதிர்மறை எண்ணங்களை முதலில் மனதில் இருந்து அகற்றிவிடுங்கள். தினமும் குறைந்தது முப்பது நிமிடங்களாவது ஆங்கிலம் நாளிதழ், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை வாசியுங்கள்.
ஆங்கிலத்தில் எழுத பழகுங்கள், போதுமான வார்த்தை ஞானம் இல்லை என்றால் எந்தமொழியிலும் திறம்பட உங்களது கருத்துக்களை வெளியிட முடியாது என்பதை நினைவில் கொள்ளங்கள். எனவே, முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தை கற்றுக்கொள்ளுங்கள். ஆங்கில டிவி செய்தி சேனல்களை பாருங்கள். இந்திய ஆங்கில மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள செய்தி சேனல்களையும் பார்க்கலாம்.
தனிமையில் உங்கள் கருத்துகளை ஆங்கிலத்தில் பேசி, அதை ரெக்கார்டு செய்துகொள்ளுங்கள். பின், அதனை நீங்களே கேட்டு வார்த்தை உச்சரிப்பில் உள்ள தவறுகளை அறிந்து, அடுத்தமுறை அதனை தவிர்க்க பயிற்சி பெறுங்கள். எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் அவசியம். பேசும்திறன், காலங்கள், வினைச் சொற்கள் போன்றவை ஒரு மொழியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை முழு ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முயலுங்கள்.
'டிக்ஸ்னரி' (ஆங்கில அகராதி)யை உங்களது அபிமான நண்பராக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் குறிப்பெடுக்கும் வார்த்தைக்கான விளக்கத்தை டிக்ஸ்னரி உதவியுடன் அறிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை உங்களது தகவல் தொடர்பில் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
ஆங்கில மொழியில் புலமை பெற்ற ஒருவரை ஆங்கில நாளிதழை சத்தமாக வாசிக்க சொல்லி, அவர் எவ்வாறு உச்சரிக்கிறார் என்பதை கூர்ந்து கவனியுங்கள். 'டயரி' எழுவதை உங்களது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதால், தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு பெரும்பாலும் இருக்காது. தினமும் நூறு வார்த்தைகளாவது தயக்கமின்றி எழுதுங்கள்.
இவை அனைத்தையும் உங்களது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே மிகச் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை அடிமனதில் பதிந்துகொண்டு பயிற்சி பெறுங்கள். ஆங்கிலம் விரைவில் உங்களது நாக்கில் தவழும்.
No comments:
Post a Comment