Tuesday, 9 December 2014

லிங்கா படத்தின் கதை திருடப்பட்ட கதை அல்ல - ரஜினி


ஹைதராபாதில் நடந்த லிங்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் சுத்தத் தெலுங்கில் நகைச்சுவை ததும்பப் பேசியது அனைவரையும் மகிழ வைத்தது. 

"சமீபத்தில் நடந்த புயல் நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தனர். ஆனால் அன்றைக்கு எனது குடும்பத்தில் முக்கிய திருமண நிகழ்ச்சி இருந்ததால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் சென்னைக்குத் திரும்பியதும், என்னால் எவ்வளவு உதவித் தொகை தர முடியுமோ அதை அளிப்பேன். நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் எனது நேரடிப் படம் இது. நடுவில் கோச்சடையான் படம் வந்தது. அது வேறு வகைப் படம். அனிமேஷனில் எடுத்திருந்தார்கள். லிங்கா நேரடிப் படம்.
முதலில் இத்தனை பிரமாண்ட படத்தை ஆறே மாதங்களில் முடித்திருப்பது. பெரிய நடிகர், பெரிய பட்ஜெட் என்பதை வைத்து இதைச் சொல்லவில்லை. இந்தப் படத்தின் சப்ஜெக்ட் அத்தனை பெரிது. சுதந்திர காலத்துக்கு முந்தைய 1930கள் மற்றும் 40களில் நடக்கும் கதை இது. இந்தக் கதைக்காக ஒரு பெரிய அணை கட்ட வேண்டியிருந்தது.

பெரிய பெரிய ரயில் சண்டைகள், யானைகள், குதிரைகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. குறைந்தது 40 காட்சிகளிலாவது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் இடம்பெற்றனர். இத்தனை பிரமாண்ட ஷூட்டிங்கை ஆறே மாதங்களில் முடித்தது சாதாரணமானதல்ல. ஹேட்ஸ் ஆப் டு டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார், அவரது யூனிட் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

நாங்களெல்லாம் நடிகர்கள் ஒன்றுமே இல்லை ஷூட்டிங்குக்கு வருவோம், நடிப்போம், போய்விடுவோம். ஆனால் இந்த டெக்னீஷியன்கள் அசாதாரணமாக உழைத்து 6 மாதங்களில் படத்தை முடித்தார்கள். அந்த உழைப்பு பாராட்டத்தக்கது.

இந்தப் படத்தில் மூணு ஆச்சர்யங்கள் இருக்கு. முதல் ஆச்சர்யம் பெரிய பெரிய டெக்னீஷியன்கள் சாபு சிரில், ரஹ்மான், ரத்னவேலு, சோனாக்ஷி, அனுஷ்கா எல்லாருமே ரொம்ப பெரிய, பிஸியான ஆர்டிஸ்ட்கள். படம் பார்க்கும்போது அவர்களின் உழைப்பு உங்களுக்கு தெரியும்.

இரண்டாவது ஆச்சர்யம், படம் வெளியாகும் நேரம் பாத்து நாலு அஞ்சு பேர் இந்தக் கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்ந்தனர். ட்விட்டர்ல ஒண்ணு பார்த்தேன்.  அதில் ரஜினி படத்துல கதை இருக்கா, அப்படி அவர் படத்துல கதை இருந்தா, அந்தக் கதைக்கு நாலு பேர் சொந்தம் கொண்டாடறாங்கன்னா நான் அந்தப் படத்தை முதல்ல பார்ப்பேன்னு ஒருத்தர் போட்டிருந்தார்.

உண்மையிலேயே இந்தப் படத்தில் நல்ல கதை இருக்கிறது. ஆனா அது அந்த நாலு பேரோடது இல்லை. பொன் குமரனுடையது. எனக்கு ரொம்பப் பிடிச்ச கதை. இதில் நடிச்சது பெருமையா இருக்கு.
மூன்றாவது ஆச்சர்யம். நான் இந்தப் படத்துல ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சதுன்னா அந்த ரயில் சண்டையோ, க்ளைமாக்ஸ் சண்டையோ அல்ல. இந்த ஹீரோயின்களோட டூயட் பாடி நடிச்சதுதான். சத்தியமா சொல்றேன். இந்த சோனாக்ஷியை  சின்னக் குழந்தையா இருக்கும் போதிலிருந்து எனக்குத் தெரியும். என் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா கூடவே வளந்தவங்க. அவங்க கூட டூயட் பாடணும்னு சொன்னதும் எனக்கு வியர்த்துடுச்சி. என்னோட முதல் படமான அபூர்வ ராகங்கள்ல முதல் ஷாட் நடிச்சப்ப கூட இப்படி டென்ஷன் இருந்ததில்லை எனக்கு.

நடிகர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு கடவுள் நினைச்சாருன்னா, 60 வயசுல நடிகர்களுக்கு டூயட் பாடற தண்டனையைக் கொடுக்கலாம். மேக்கப் போட்ட பானுவுக்கு நன்றி. கேமராமேன் ரத்தினவேலு கூட சென்னையில நடந்த ஆடியோ விழாவுல வெளிப்படையா சொல்லியிருந்தாரு. நான் ரஜினிகாந்தை ரொம்ம்பக் கஷ்டப்பட்டு இளமையா காட்டியிருக்கேன். ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அழகா காட்டியிருக்கேன்னு சொன்னாரு. ரொம்ப கஷ்டப்பட்ட இளமையான காட்டினதா சொன்னது ஓகே.. அழகா காட்டியிருக்கேன்னு சொன்னது(பலமாக சிரிக்கிறார்)
இந்தப் படம் 6 மாதத்தில் முடிந்ததை நான் சாதனையாகச் சொல்வேன். என்னைப் போன்ற ஒரு சீனியர் நடிகர், இந்த துறையில் இவ்வளவு சம்பாதித்த பிறகு, அந்தத் துறைக்கு ஏதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும், இங்குள்ள இளம் கலைஞர்களுக்கு ஒரு உதாரணத்தைத் தரவேண்டும். அதுதான் இந்த லிங்கா. இதை ஒரு சபதமாக எடுத்துக் கொண்டு செயல்பட்டோம். அதை ரவிக்குமார் சாதித்துக் காட்டினார்.

ஹாலிவுட்டில் கூட படங்கள் தொடங்குவதற்கு முன்பு பல மாதங்கள், ஏன் வருடங்களைக் கூட எடுத்துக் கொண்டு முன் தயாரிப்புப் பணிகளைச் செய்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பை 3 அல்லது நான்கு மாதங்களில் முடித்துவிடுகிறார்கள். ராஜமவுலியின் பாஹுபலி இதில் விதிவிலக்கு. இதில் அவரைச் சேர்க்க வேண்டாம். அவர் ஒரு அற்புதமான கலைஞர். இந்தியாவின் நம்பர் ஒன் கலைஞராக வரக்கூடியவர். சந்தேகமில்லை. சொல்லப்போனால், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருடன் பணியாற்றுவதை சந்தோஷமாகக் கருதுவேன்.

ரவிகுமார், இந்தப் படத்தின் கேப்டன். சிறப்பாகப் பணியாற்றினார்.
அடுத்து அல்லு அரவிந்த் சொன்னதுபோல, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். ஆபத்பாந்தவன். பலனை எதிர்ப்பார்க்காமல் கூப்பிட்ட நேரத்தில் ஓடி வந்து உதவுபவர். அதனால்தான் அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்.

ரத்னவேலு இந்தப் படத்துக்காக மிக கஷ்டப்பட்டார். கொட்டும் மழையில் படம்பிடித்தார். அனுஷ்கா மிக அருமையான பெண். சிறந்த நடிகை. அவருக்கு நன்றி.

அடுத்து ஜெகபதி பாபு. பிறக்கும்போதே வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர். சினிமாவில் ஜென்டில்மேன் எனலாம். குசேலனில் என்னுடன் நடித்தவர். இந்தப் படத்தில் அவரை நன்றாகப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து அவருடன் பணியாற்ற விரும்புகிறேன்.

என் படங்களை தமிழ் ரசிகர்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்களோ, அதே உற்சாகத்துடன் தெலுங்கு ரசிகர்களும் ரசித்து என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்தப் படமும் உங்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கும். உங்கள் ஆதரவும் உற்சாகமும் எனக்குக் கிடைக்கும் என நம்புகிறேன்என்றார்.


No comments:

Post a Comment