கமல் ஹாஸன் நடித்த விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், பாபநாசம் என மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக வேண்டும். பட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. ஆனால் தாமதமாகிக் கொண்டிருக்கிறது ரிலீஸ். கமலின் ஆரம்ப காலத்தில் கூட இப்படியொரு நிலை இருந்ததில்லை. ஆனால் அவரை உலகநாயகன் என ரசிகர்கள் கொண்டாடும் தருணத்தில் இப்படியொரு சிக்கல். தாமதத்துக்கு பல்வேறு விளக்கங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இப்போதைக்கு அவரது எந்தப் படத்தையும் வெளியிட முடியாது எனும் அளவுக்கு நிலையை சிக்கலாகியிருக்கிறது. இந்த சிக்கலைத் தீர்க்க தீவிரமாக பஞ்சாயத்து நடந்து வருகிறது. இதில் கமல் சார்பில் அவரது அண்ணன் சந்திரஹாஸனே நேரடியாகப் பங்கெடுத்து வருகிறார். சிக்கலுக்கு முக்கிய காரணம் காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியா என்ற அரசு அமைப்பில் நடந்துவரும் வழக்கு. 'விஸ்வரூபம்' படத்துக்கு போதிய அரங்குகள் கிடைக்காத சூழலில், படத்தை முதலில் டி.டி.எச். மூலம் நேரடியாக வீடுகளிலும், பின்னர் தியேட்டர்களிலும் வெளியிடப் போவதாக கமல் அறிவித்ததார்.
இதைக் கடுமையாக எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், பின்னர் சமரசமாகி, 400 அரங்குகளை படத்துக்கு ஒதுக்கியதெல்லாம் நினைவிருக்கலாம். இடையில் முறுகல் நிலை தொடர்ந்தபோது, "தொழில் செய்வது என் உரிமை. அதை முடக்கப் பார்க்கிறார்கள்' என டெல்லியில் உள்ள காம்ப்பெடிட்டிவ் கமிஷன் ஆஃப் இந்தியாவில் வழக்குப் போட்டார் கமல்.
இதையடுத்து, தமிழ்நாடு திரையரங்க உரிமை யாளர் சங்கத் தலைவர் அண்ணாமலை, செயலாளர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர், மக்கள் தொடர்பாளர் ஆர்.ராமானுஜம், திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவர் "அபிராமி' ராமநாதன் மற்றும் சென்னை-செங்கை திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி உள்ளிட்ட 13 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது கமிஷன். இந்த வழக்கிற்கு ஆதாரமாக 'விஸ்வரூபம்' படத்தை வெளியிடக்கூடாது' என தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர் சங்க லெட்டர்பேடில் எழுதப்பட்ட தீர்மானத்தை தாக்கல் செய்திருந்தார் கமல் அண்ணன் சந்திரஹாஸன் .
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி 13 பேரும் பதில் வழக்கு தாக்கல் செய்ய, அது தள்ளுபடியாகிவிட்டது. ஏற்கெனவே ஒஸ்தி படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என தியேட்டர்கள் உரிமையாளர் சங்கம் அறிவித்து, அதை ரிலையன்ஸ் வழக்காக காம்பெடிடிவ் கமிஷனில் தாக்கல் செய்ய, அதில் சங்ககத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனவே இந்த முறை வழக்கில் தமக்கு எதிரான தீர்ப்பு வந்தால் பெரிய பாதிப்பு இருக்கும் என்தால் வழக்கை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது தியேட்டர்கள் சங்கம் தரப்பு. வழக்கு தீராவிட்டால் படம் வெளியாகாது என உத்தமவில்லன் படத் தயாரிப்பாளரான லிங்குசாமிக்கு தெரிவித்துவிட்டார் அருள்பதி.
உடனே கமல் அண்ணன் சந்திரஹாஸனிடம் இந்த விஷயத்தை போஸ் தெரிவிக்க, பஞ்சாயத்து ஆரம்பமானது. உட்லண்ட்ஸ் அரங்கில் அருள்பதி, சந்திரஹாஸன், போஸ், பன்னீர்செல்வம் உள்பட ஐந்து பேர் பங்கேற்க பேச்சு தொடங்கியது. 'விஸ்வரூபம் விஷயத்தில் எல்லாம் சுமூகமாக முடிந்து, கமலும் எங்களுக்கு மோதிரமெல்லாம் அணிவித்த நிலையில், இந்த வழக்கை எப்படி தொடர்ந்து நடத்தலாம். அதை வாபஸ் வாங்க வேண்டும்,' என அருள்பதி கோரிக்கை வைக்க, இனி வழக்கை வாபஸ் வாங்க முடியாது. காரணம் அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறினாராம் சந்திரஹாஸன்.
'வழக்கை வாபஸ் பெறும் வழி எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்க' என்று கேட்டுள்ளார், மூத்த வழக்கறிஞரான சந்திரஹாஸன். இது அருள்பதி தரப்பை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. என்ன ஆனாலும் சரி இந்த முறை படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது. ஆனால் அதை வெளிப்படையாக செய்யக்கூடாது என்ற உறுதியோடு கலைந்திருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை நடந்தததையும், உத்தம வில்லன் வெளியீட்டுக்கு சிக்கல் இருப்பதையும் சந்திரஹாஸனும் ஒப்புக் கொண்டார். உத்தம வில்லன் வெளியீட்டுக்கு முன்பே காம்பெடெடிவ் கமிஷன் வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் எனத் தெரிகிறது. அது திரையுலகையே புரட்டிப் போடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment